ஒளி அழகிய கடன் அறக்கட்டளை - an Open Learning Initiative

”தமிழுள்ள தமிழ”ர்களாய் வாழ்வோம்!
இன்று உலக தாய்மொழிகள் நாள்!!
******************************************************** கவிஞர் சீனி நைனா முகம்மது பாடியது போல,நாமெல்லாம் “தமிழோடு புவிவந்த பிள்ளை”கள்.
எப்படி அதனோடு வளர்ந்தோம் என எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது…. “அன்னைஎனைத் தொட்டிலிட்டு அன்புடன்தா லாட்டி
ஆசையுடன் கொஞ்சியதும் அருமைமிகு தமிழே!
இன்பமுடன் என்தந்தை இருகையால் ஏந்தி
என்னுடன் குலாவியதும் எங்களது தமிழே!!”
என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதிய கவிஞர் யாரென அறியேன். இதுதான் என் ஆசிரியத் தந்தை எனக்கு மொழிப் பற்றையூட்டும் விதத்தில் நான்முதல்வகுப்பில் படிக்கும்போது சொல்லிக் கொடுத்த பாடல். “…ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே,
அம்மேநின் சீர்முழுதும் அறைதல்யார்க் கெளிதே…”
என்று தமிழ்த்தாயை வியந்து நிறையும் இந்தப் பாடல் நான் ஆறாம்வகுப்பு படிக்கும் போது மனப்பாடம் செய்தது. எட்டு/ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களைத் தானாகவே விரும்பிப் படிக்கும் வேளை வந்துவிட்டது. “தமிழுக்கு அமுதென்று பேர்…, `கரும்பு தந்த தீஞ்சாறே,கனிதந்த நறுஞ்சுளையே,கவின்செய் முல்லை அரும்புதந்த வெண்ணகையே,அணிதந்த செந்தமிழே, அன்பே…” என்றெல்லாம் மனப்பாடம் செய்யலானேன். என் தமிழாசிரியர்களில் `இளம்பாரதி’ என்று புகழப்பட்ட புலவர் வேணுகோபால் அய்யா மறக்க முடியாதவர்.இன்னொரு தமிழாசிரியரான வேலாயுதம், அப்போது திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவராக இருந்த ஒருவரின் வகுப்புத்தோழர்; அன்பானவர்…இப்படியே வளர்ந்த என் இளமைக் காலத் தமிழ்த் தொடர்பு,டாக்டர் இலக்குவனார், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் வரை நீண்டது. “எப்பக்கம் வந்து புகுந்துவிடும்-இந்தி
எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்…?”
-என்று எழுச்சி பெற்றுப் போராடி,
போலிஸ் காவலில் இருந்து,படிப்புகெட்டுப் பின்னர் மீண்டது ஒரு நேரம். “நீராரும் கடலுடுத்த ….” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பெரிதும் மக்களால் அறியப்பட்ட காலமும் இதுவே. தாய்மொழி ஈடுபாட்டைப் புலப்படுத்தும் பாடல் எழுதியதில் என் ஆய்வுக்கெட்டியவரை (அவ்ரங்கஸிபைச் சந்தித்த) குமரகுருபரர் ஒரு முன்னோடி.அதில் இன்றுவரை உச்சத்தில் இருப்பவர் பாவேந்தர் பாரதிதாசன். எனினும் பாவேந்தர் ஏனோ பெரிதாக நினைவு கூரப் படவில்லை.வருத்தமாக இருக்கிறது. தமிழைத் தமிழுள்ள தமிழ் என்றும், “தமிழில்லாத் தமிழென்றும்” வகைப்படுத்தி உவமையாக்கிப் பாடிய உலகின் ஒரே புலவர் `கனகாபிஷேக மாலை’ காப்பியம் எழுதிய ராஜகம்பீரம் ஷேக் நயினார்கான் எனும் கனக கவிராயர் ஆவார். தமிழரெல்லாம் “தமிழுள்ள தமிழராக” வாழ உலக தாய்மொழிகள் நாளான இன்று உறுதியாக உளங்கொள்ளல் என்றும் சிறப்பளிப்பளிப்பதாக இருக்கும்.